Monday, February 1, 2010

பறவைகளை படமெடுக்க ஆசையா?

வணக்கம் மக்கள்ஸ்,

கண்ணெதிரே மிக அருகில் ஒரு பறவையை பார்த்தால் உடனே மக்கள் சொல்வது "ஐயோ கைல கேமரா இல்லாம போயிடுச்சே" கேமரா இருக்கும் பட்சத்தில் அது செல்போன் கேமராவாக இருந்தாலும் சரி அந்த பறவையை க்ளிக்காமல் விட மாட்டோம். பறவைகள் பரவசத்தின் குறியீடுகள்.

ஆனால் தற்செயலாக வேண்டுமானால் பறவைகளை பக்கத்தில் படமெடுக்கலாம். இதற்கென்றே கேமராவை கட்டிகொண்டு கிளம்பினால் ஏமாற்றம்தான் மிஞ்சும்.
பறவைகளை படமெடுக்க ஆசைப்படாதவரே இருக்கமாட்டோம். இது கொஞ்சம் பெரிய சப்ஜெக்ட். தமிழில் இதற்கான குறிப்புகள் கண்ணில் படாத்தால் என் சொற்ப கால அனுபவத்தில் தெரிந்ததை இலுப்பைபூவாக இங்கு வைக்கிறேன்.

முதலில் பொதுவான சில விசயங்கள்.

ஆர்வம் இருந்தாலும் சில பொதுவான முக்கியமான அங்கலாய்ப்புகள் என்னவெனில்

1. இந்த சிட்டில முழுசும் கான்கிரீட் கூடுகள்தான். இதுல எங்க போய் பறவைகள் இருக்கு?
அதுக்கு எதாச்சும் ஃபாரஸ்ட்பக்கம்தான் போகனும்.

2. பறவைகள் புகைப்படம் எடுப்பது ரொம்ப காஸ்ட்லியான ஹாபி.விலைஉயர்ந்த
டெலிலென்சுகள் வேண்டும்.

இவை இரண்டுமே தவறானது.எப்படி என்று ஒவ்வொண்றாக பார்க்கலாம்.

பெருநகரத்தில் இருப்பவர்கள் உங்கள் குடி இருப்புக்கு அருகில் உள்ள மரங்களை கவனியுங்கள். இந்த சிட்டியில் எந்த பறவை இருக்கும் என்று நினைக்கவேண்டாம். கண்டிப்பாக குறைந்தபட்சம் காக்கை,மைனா,குயில்,புறா (அபார்ட்மெண்ட்களில் தவறாமல் இருக்கின்றது.)சிட்டுகுருவி(ஆமாங்க இது அழிந்தெல்லாம் போகவில்லை. சென்னை பெங்களூரிலேயே நிறய பார்த்தேன்)இருக்கும். சிட்டியில் குறைவாக பறவைகள் இருந்தாலும் அவைகள் அடைக்கலமாக சொற்ப இடங்களே இருக்கும்.உங்கள் குடி இருப்புக்கு அருகில் உள்ள மரங்களை கவனியுங்கள். மாலை நேரத்தில் ஒற்றை மரத்தில் எத்தனை பறவைகளின் சத்தம் கேட்கும் கேட்டிருப்பீர்களே?

அடுத்ததாக மனிதனை பார்த்து பார்த்து பழகி போன பறவைகள்தான் பக்கத்தில் வரும். இதற்காக 200கிமீ கிளம்பி போய் ஒரு காட்டுக்குள் சென்றால் அங்கே உள்ள பறவைகள் தமக்கும் நமக்கும் 50 அடி இடைவெளியையாவது மெயின்டெய்ன் பண்ணும்.காரணம் காட்டில் மனிதன் புது பிராணி. அதேசமயத்தில் உங்கள் வீட்டை ஒட்டி உள்ள மரமோ அல்லது பக்கத்தில் வீடு கட்டாமல் இருக்கும் காலி பிளாட்டில் உள்ள புதரோ அல்லது நீங்கள் வாக்கிங் செல்லும் பார்க்கோ அங்கு வரும் பறவைகளுக்கு சிட்டி மனிதன் சக பிராணி.அவற்றிற்கு வேறு போக்கிடம் இல்லை.சர்வ சாதாரணமாக அருகில் சென்று வர முடியும்.

பறவைகளின் அருகில் செல்வதுதான் முக்கியம்.அதன் பின் படமெடுப்பது ச்சும்மா ஜுஜுபீ

அடுத்தது காஸ்ட்லி லென்சுகள் கண்டிப்பாக உதவும்தான். ஆனால் எவ்வளவு விலை உயர்ந்த லென்சுகளாக இருந்தாலும் ஒரு பறவையின் பக்கத்தில் சென்று எடுக்கும் படம்தான் பட்டாசாக இருக்கும். அதுவும் உங்கள் கிட் லென்சில் கூட எடுக்கமுடியும் :) நம்புங்கள். எப்படி அவ்வளவு அருகில் செல்வது என்பதை பின்பு பார்ப்போம்.

முதலில் பறவைகளை கண்டறிய உங்கள் வீடு,பார்க், அலுவலகம், போய்வரும் பாதைகள் இவற்றை சுற்றிலும் எப்போதும் போல் இல்லாமல் பறவைகள் தென்படும் என்ற புதிய பார்வையில் பாருங்கள். அவை தென்படும். அந்த இடங்களை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். மரங்களில் புதர்களில் வீட்டு மாடங்களில் எங்கும் பெரும்பாலும் ஒரே இடத்தில்தான் பறவைகள் அமரும். அந்த இடங்களை கவனித்து வைத்துக்கொள்ளுங்கள்.

பறவைகளின் சப்தம் மூலமாக கண்டுபிடிக்க காலை மாலை நேரங்கள்தான் இதற்கும் உகந்தவை. பறவைகள் பாடுவது சப்தம் கொடுப்பதெல்லாம் இந்த நேரங்களில்தான் இருக்கும்.

பொதுவாக அசைவுகளுக்கு அலர்ட் ஆகுமாறு கண்களை பழக்கி கொள்ளுங்கள். ஒரு புதரையோ மரத்தையோ பார்க்கும் போது நம் பார்வையில் கவர் ஆகும் பரப்பில் எங்கு ஒரு சிறு அசைவு இருந்தாலும் உங்களுக்கு கவனம் அங்கு போகவேண்டியது வரும். கேட்க சாதாரணமாக தெரிந்தாலும் பழக்கத்தில் வருவது சிரமம். பறவைகள் மேல் ஆர்வமிருப்பின் இது தானாக வரும்.

காலை 9 மணி வரையில் படு பிசியாக சுற்றும் பறவைகள் அதற்கு மேல் கண்ணில் படாது. சப்தம் கொடுப்பதும் மிக குறைந்துவிடும். நன்றாக கவனித்து பார்த்தால் டயர்டாகி மரங்களில் புதர்களில் சப்தமெழுப்பாமல் அமர்ந்திருக்கும். அந்த நேரங்களில் நாம் நாம் ஓரளவுக்கு அருகில் செல்ல முடியும். நாம் கவனிக்கும் வரை சப்தம் காட்டாமல் அமர்ந்திருக்கும்.